சென்னை :கெல்லீஸ் சாலை வழியாக கடந்த 18ஆம் தேதி விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது, கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி வைத்திருந்ததாக காவல் துறையினர் வழி மறித்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தபோது திடீரென விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், விக்னேஷ் குடிபோதையில் காவல் துறையினரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும், ஏற்கெனவே முகத்தில் சிராய்ப்பு காயங்கள் இருந்ததாகவும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது. இது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது. இதனையடுத்து, விக்னேஷின் மரணத்தை மறைப்பதற்காகக் காவல்துறை விக்னேஷ் வேலை பார்க்கும் குதிரை உரிமையாளர் மூலமாக ரூ.1 லட்சம் வழங்கியதாக விக்னேஷின் சகோதரர் வினோத் கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இதில் திடீர் திருப்பமாக காவல் துறை சார்பில் விக்னேஷ் குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.1 லட்சம் தன்னுடையது என குதிரை உரிமையாளர் ரஞ்சித் கூறினார்.
இந்நிலையில் காவல் நிலையத்தில் போலீசார் விக்னேஷை துரத்திப் பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.மேலும் காவல் துறையினர் இந்த மரணத்தை மறைக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக விக்னேஷின் சகோதரர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் தனது சகோதரர் விக்னேஷை அடித்து கொன்றதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என விக்னேஷின் குடுப்பத்தினரால் வழக்குத்தொடரப்பட்டு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.