சென்னை:தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலைத் தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் அக்டோபர் 22 ஆம் தேதி நடத்தப்பட்டது.
ஆனால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட தயாளன் என்பவர், அமைச்சரின் ஆதரவுடன் வார்டு உறுப்பினர்களை தடுத்து நிறுத்தியதாகவும், இதனால் தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற வார்டு உறுப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், மறைமுக தேர்தலுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (நவ.11) விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், "9 மாவட்டங்களிலும் பல இடங்களில் மறைமுக தேர்தல் நடத்தப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மறைமுக தேர்தலை விரைந்து நடத்த முன்வர வேண்டும். இந்த தேர்தல் எப்போது நடத்தி முடிக்கப்படும் என்று நாளை (நவ.12) விளக்கமளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்றும், எந்த ஒரு தேவையில்லாத அழுத்தத்திற்கும் அவர்கள் ஆளாகாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கும், காவல்துறைக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் 1,150 நடமாடும் மருத்துவ வாகனம் தொடக்கம்