குலுக்கல் முறையில் வெற்றியை தவறவிட்ட பரிதாபம்
விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு ஊராட்சி 15 வார்டுகளை கொண்டது. இதியில் 8ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சரவணன், ராமமூர்த்தி ஆகியோர் தலா 183 வாக்குகள் பெற்றிருந்தனர். அதனால், குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்வு செய்யலாம் என்றும் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால், குலுக்கல் நடத்தாமல் சரவணன் வெற்றிபெற்றதாக அறிவித்து, சான்றிதழ் வழங்கினர். மேலும், கூரைக்குண்டு ஊராட்சியில் நேற்று காலை முறைப்படி ஆவணத்தில் கையெழுத்திட்டு சரவணன் பொறுப்பேற்றுள்ளார். இதையறிந்த மாற்றுக் கட்சி வேட்பாளர் ராமமூர்த்தி, அவரது ஆதரவாளர்கள் குலுக்கல் நடத்தாமல் எவ்வாறு ஒருதலைபட்சமாக வெற்றிபெற்றதாக ஒருவரை அறிவிக்கலாம் எனக்கூறி முற்றுகையிட்டனர். அப்போது, தேர்தல் அலுவலர் விடுமுறை என்பதால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரை பார்க்குமாறு அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் ராமமூர்த்தி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதைத் தடுத்த காவல்துறையினருக்கும் ராமமூர்த்தி தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலையில் மறியல் செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர், ராமமூர்த்தி தரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சம்பந்தப்பட்ட அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதாக உத்தரவாதம் அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்துச் சென்றனர்.
சேர்மன் பதவியை தேர்ந்தெடுப்பதில் மோதல்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 15 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தத் தேர்தலில் அதிமுக - 7, திமுக - 6, பாஜக மற்றும் சுயேட்சை தலா ஒருவரும் வெற்றி பெற்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணி 8 ஒன்றியக் குழு உறுப்பினர்களும் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினரும் சேர்ந்து ஒன்றியக்குழு சேர்மன் பதவியை கைப்பற்றியது.
அதிமுக ஒன்றிய செயலாளர் துரை மாணிக்கம் சேர்மன் பதவியை கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தராஜ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்து, எம்எல்ஏ தரப்பு ஆதரவாளர் ஒருவருக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் சட்டப்பேரவை உறுப்பினர் ஆதரவாளர்களுக்கும் அதிமுக ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.