தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 2, 2019, 3:24 PM IST

ETV Bharat / state

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரம்!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

local body
local body

ஊரக உள்ளாட்சி இடங்களுக்கு மட்டுமே தற்போது தேர்தல் நடைபெறும் என்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற பகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது:

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்ட வாக்குப் பதிவில் 31 ஆயிரத்து 698 வாக்குச்சாவடிகளிலும் இரண்டாவது கட்ட வாக்குப் பதிவு 32 ஆயிரத்து 92 வாக்குச் சாவடிகளிலும் நடைபெறும். முதல் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 64 லட்சம் வாக்காளர்களும் இரண்டாம் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 67 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இதற்கான தேர்தல் அறிவிக்கை 6.12.2019 அன்று வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் 6.12.2019 முதல் தொடங்கும். தேர்தல் அன்று, வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும், வாக்கு எண்ணிக்கை 2.1.2020 அன்று காலை 8 மணிக்கு தொடங்கும். ஊரக உள்ளாட்சிகளில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 974 பதவி இடங்களுக்கு நேரடித் தேர்தல் நடைபெறும்.

கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் நான்கு விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களைக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் நேஷனல் இன்பர்மேட்டிக்ஸ் சென்டர் என்றழைக்கப்படும் தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து ஆன்லைன் முறையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளது.

ஊரகப் பகுதிகளில் ஒரு கோடியே 64 லட்சத்து 28 ஆயிரத்து 941 ஆண் வாக்காளர்களும், ஒரு கோடியே 67 லட்சத்து 4 ஆயிரத்து 868 பெண் வாக்காளர்களும் 2277 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 3 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 86 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஊராட்சி தேர்தலுக்காக 870 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 16 ஆயிரத்து 840 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு ஏழு அல்லது எட்டு அலுவலர்கள் வீதம் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு நடைபெறும். மாவட்டந்தோறும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 200 ரூபாயும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 600 ரூபாயும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 600 ரூபாயும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஆயிரம் ரூபாயும் வைப்பு தொகையை செலுத்த வேண்டும்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 9 ஆயிரம் ரூபாயும், கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் 34 ஆயிரம் ரூபாயும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் 85 ஆயிரம் ரூபாயும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் அதிகபட்சமாக செலவு செய்யலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் செலவின கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் மீறுபவர்கள் மீது உள்ளாட்சி தேர்தலில் மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிடாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். தேர்தல் நடத்த போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கண்டறியப்பட்டு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படும்.

ஊரக உள்ளாட்சி இடங்களுக்கு மட்டுமே தற்போது தேர்தல் நடைபெறும் என்றும் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஆகிய நகர்புற பகுதிகளுக்கு பின்னர் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக முதல்கட்டமாக ஊராட்சி தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தல் அட்டவணை விவரம்

  • தேர்தல் அறிவிப்பு பிரசுரித்தல் மற்றும் வேட்பு மனுக்கள் பெறுதல் - 06.12.2019
  • வேட்பு மனு தாக்கல் செய்வற்கான இறுதி நாள் - 13.12.2019
  • வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல் - 16.12.2019
  • வேட்பு மனுக்களை திரும்பப் பெறுதல் - 18.12.2019
  • வாக்குப்பதிவு நடைபெறும் நாள்:
  • முதல் கட்ட வாக்குப்பதிவு - 27-12-2019
  • இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - 30.12.2019
  • வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் - 2.01.2020
  • தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும் நாள் - 04.01.2020
  • தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நாள் - 06.01.2020
  • மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் துணைத்தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலுக்கான கூட்ட நாள் - 11.01.2020

For All Latest Updates

TAGGED:

local body

ABOUT THE AUTHOR

...view details