உள்ளாட்சித் தேர்தல் ஜு ரம் தமிழ்நாட்டை தொற்றிக் கொண்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த 90 சதவீதம் தயாராகி விட்டது. அதேபோல அரசியல் கட்சிகளும் தொண்டர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கி விட்டன. இருபெரும் கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கூட்டணி வைத்தே உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளன. இதற்காக அதிமுக, திமுக விடம் கூட்டணி கட்சிகள் தமக்கு வேண்டிய இடங்களுக்கு தற்போதே துண்டுபோட்டு இடம்பிடிக்க ஆரம்பித்துள்ளன.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து உள்ளாட்சித் தேர்தல் 'ரேஸில்' களம் இறங்கவுள்ளன. இதில் தங்களுக்கான உள்ளாட்சி இடங்களை குறிப்பாக மேயர் போட்டியிடங்களை பெறவேண்டும் என்பதில் கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி நடக்கிறது. எடப்பாடியின் மாமனார் இறப்பு துக்கம் விசாரிக்க பாமக தலைவர் ராமதாஸ் வரும்போது தங்களுக்கு வேண்டிய இடங்களை பட்டியல் போட்டுக்கொடுத்துவிட்டு வந்துவிட்டார். இந்தக் கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான பாஜகவில் தமிழ்நாடு தலைவர் இல்லாததால் அந்தக் கட்சி கூட்டணி பேரத்தில் தற்போது 'கப்சிப்' நிலை.
உள்ளாட்சித் தேர்தல்: கேப்டன் கேட்பது கிடைக்குமா?
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடபெற சூழல் உருவாகி உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக 3 மேயர் இடங்களை கேட்டுள்ளதாகவும், அதற்கு அதிமுக தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், மற்றொரு மாநில கட்சியான தேமுதிக தற்போதே தனக்கான இடத்தைக் கேட்டுப் பெறுவதில் மும்முரமாக இறங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது உள்ள 15 மாநகராட்சிகளில் 3 இடங்களை கேட்பதாகவும், கூட்டணியின் மொத்த இடங்களில் 20 சதவீத இடங்களை 'கேப்டன்' குறிவைத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இதில் மதுரை, வேலூர், திருச்சி ஆகிய மாநகராட்சியை தேமுதிக குறிவைத்துள்ளது. இதில் விஜயகாந்த் சொந்த ஊர் மதுரை என்பதாலும், வேலூர் பிரேமலதா சொந்த ஊர் என்பதாலும் இந்த அக்கறையாம். தேமுதிக கணக்கு இப்படி இருக்க அதிமுகவோ இவர்களை நம்பி இவ்வளவு கொடுக்க முடியாது என்கிறது. பாராளுமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு விழுந்த பெருத்த அடி, சரிந்து வரும் அவர்கள் வாக்கு வங்கி ஆகியவற்றை கூட்டி கழித்து பார்த்த அதிமுக, தேமுதிகவின் 'டிமாண்டு'க்கு தயங்கி நிற்கிறது. ஆனால் வரப்போகும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூட்டணி கட்சிகளின் முக்கியத்துவம் கருதி, செய்வதறியாமல் அதிமுக தவித்துவருகிறது.
இதையும் படிங்க: கஜா புயல் தாக்கி ஓராண்டாகியும் ஆறாத ரணங்கள்! OneYearofGaja