சென்னையில் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டிடங்களில் இருந்து லாரிகள் மூலம் எடுக்கப்படும் கழிவுநீர், மழைநீர் வாய்க்கால்களில் விடப்படுவதாக வந்த புகாரை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொர்லபாடி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் லாரிகள் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்படுவதை முறைப்படுத்த விதிகளில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், திருத்தப்பட்ட விதிகளும் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
திருத்தப்பட்ட புதிய விதிகளின்படி கழிவுகளை வெளியேற்றும் பணியில் ஈடுபடும் லாரிகளுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து உரிய அனுமதி பெறப்பட வேண்டும் என்றும், 2 ஆண்டுக்கான அனுமதிக்கு ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீர் எங்கு வெளியேற்றப்படுகிறது என்பது குறித்த விவரத்தை ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை அனுமதி வழங்கிய உள்ளாட்சி அமைப்புகளிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.