சென்னை:மனித உடலில் கல்லீரலின் செயல்பாடு என்பது மிகவும் இன்றியமையாதது. உடலின் செயல்பாடுகள் என்பது கல்லீரலின் செயல்பாட்டினை பொறுத்தே அமைகிறது. நாம் உண்ணும் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவற்றினை செரிமானம் செய்யும் ஒரே இடம் கல்லீரல். கல்லீரலில் ஏற்படும் பாதிப்பை அதுவே மீண்டும் சரி செய்து கொள்ளும் திறனை பெற்றுள்ளது.
கல்லீரல் அழற்சி: தற்பொழுது உள்ள வாழ்கை முறை மாற்றம், உணவு முறையில் மாற்றம் ஆகியவற்றினால் கல்லீரலில் பாதிப்பும் ஏற்படுகிறது. சமீப காலங்களில் அதிகளவில் மதுப்பழக்கம் உள்ளவர்களிடையே, கல்லீரல் அழற்சி நோய்யின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், கல்லீரலில் ஏற்படும் கொழுப்பின் காரணமாகவும் அழற்சி ஏற்படுகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் சிறப்பு சிகிச்சை:தமிழ்நாடு சுகாதாரத்துறை தரப்பில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கல்லீரல் அழற்சி நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்க, தனியாக சிகிச்சை கட்டிடமும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் அழற்சி நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கடந்த 2021 முதல் தான் இதற்கென தனி சிகிச்சை கட்டிடம் கட்டப்பட்டு, பிரத்யோகமாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, தினமும் கிட்டத்தட்ட 150 புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர். அவர்களில் உள் நோயாளிகளுக்கென 90 படுக்கைகளுடன் கூடிய வசதிகள் உள்ளன. மேலும், கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக ரேலா மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு, கல்லீரல் கிடைத்தவுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர்ந்து காண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
5 பேருக்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: இது குறித்து சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் கூறும்போது, “தமிழ்நாடு அரசு, ரேலா மருத்துமனையுடன் இணைந்து புரிந்துணர்வு போடப்பட்டது. அதன் மூலம் ரேலா மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் இணைந்து சென்னை மருத்துவக்கல்லூரியின் கல்லீரல் சிகிச்சை மையத்தில் 5 பேருக்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு தனியார் மருத்துவமனையில் 40 லட்சம் வரையில் செலவாகும். ஆனால் இங்கு முழுவது இலவசமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு அரசு மருத்துவர்களும் பயிற்சி பெற்று வருவதால் வரும் காலங்களில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது அதிகரிக்கும். அதற்கான நவீன வசதிகளுடன் கூடிய அறுவை அரங்கும் உள்ளது.
அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கும் தேவையான மருந்துகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் பராமரிக்கும் பணியையும் செய்து வருகிறோம். கல்லீரல் துறையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல் ஹெபடைட்டிஸ் பி மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஹெபடைட்டிஸ் பி, சி -க்கு தடுப்பூசி: கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மது அருந்துவதால் நாளடைவில் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. ஹெபடைட்டிஸ் பி, சி போன்றவற்றால் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். மது அடிமை மையங்களில் இருந்து கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் வருகின்றனர்.
உறுப்பு தானம் அவசியம்: பதிவு அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து தானமாக கல்லீரல் பெறப்பட்டு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 6 ஆயிரம் பேர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2500 பேர் இருதயப் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். உடல் உறுப்பு தானம் அளிப்பது தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமாவதற்கு முக்கிய காரணமாகும்” என தெரிவித்தார்.
கல்லீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர் மற்றும் அரசு மருத்துவமனை கல்லீரல் துறை இயக்குநர் பிரேம்குமார் கூறும்போது, “ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் நோய்க்கு தரமான சிகிச்சை வழங்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையை தாண்டி தற்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 4 அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
32 வகையான பரிசோதனைகள்: இணை நோய் உள்ளவர்களுக்கும் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கு என தனி வார்டு அமைக்கப்பட்டு, அங்கு 6 படுக்கைகள் உள்ளன. ஒரு அறுவை சிகிச்சை செய்வதற்கு 2 முதல் 3 வாரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக 32 வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு 15 துறை மருத்துவர்கள் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு தான் ஒரு அறுவை சிகிச்சை என்பது இங்கு மேற்கொள்ளப்படுகிறது.