சென்னை: காதல், சண்டை, கலவரம் இவையெல்லாம் இல்லை என்றால் பிக் பாஸ் வீட்டிற்கு என்ன மரியாதை என்பதைப் போல, ஒவ்வொரு சீசனிலும் வீடு இரண்டாகிவிடும். ஆனால் இந்த சீசனில் புதிய ட்விஸ்ட்டாக, வீட்டையே இரண்டாக்கி போட்டியாளர்களை உள்ளே அனுப்பியுள்ளனர். "இது புதுசா இருக்குனே, ரொம்ப புதுசா இருக்கு" என பார்வையாளர்கள் எண்ண, முதல் நாளிலேயே கேப்டனுக்கான டாஸ்க் (Task), ஆறு பேர் வெளியேற்றம், அதிரடி நாமினேஷன் என்று வீடே அதகளமானது.
"பொறும சாமி பொறும" என பார்வையாளர்களின் மயின்ட் வாய்ஸ் (Mind Voice) ஒருபுறம் ஓட, இந்த பக்கம் காதலா? நட்பா? என அடையாளம் தெரியாத கருத்து பரிமாறல் ரவீணாவுக்கும், மணிச்சந்திராவுக்கும் இடையே மலர்ந்து கொண்டிருக்கிறது. காதலோ, நட்போ நமது கண்களுக்கு முதலில் படுவது சண்டைதானே? அதற்கு முதல் வித்துதான் போட்டியாளர் பிரதீப். எப்பொழுதும் எதையோ சிந்தித்துக்கொண்டே இருக்கும் பிரதீப், சரியான நேரத்தில், சம்பந்தமே இல்லாமல் சண்டைக்கோழியாக மாறிவிடுகிறார்.
பிக் பாஸ் (Bigg Boss) வீட்டிற்கும், ஸ்மால் பாஸ் (Small Boss) வீட்டிற்கும் இடையே கொளுத்தி போட நினைத்த பிரதீப், மங்களகரமாக அதை அடுப்பங்கரையில் இருந்து ஆரம்பித்து வைத்தார். ஆனால் என்ன, இவர் பட்ற வைத்த நெருப்பு இவருக்கே திரும்பிவிட்டது. கூல் சுரேஷ் தான் வீட்டில் பெரிய பிரச்னையாக இருப்பார் என எதிர்பார்த்தால், அந்த பட்டம் தனக்கு தான் வேண்டுமென அடம் பிடிக்கிறார் பிரதீப். எப்படியோ "நம்ம தல கெத்துப்பா" என கூல் சுரேஷின் ரசிகர்கள் கூலாக உள்ளனர்.
யார் எப்படியோ போகட்டும், நமக்கு கமல்ஹாசன் கொடுத்த வேலைதான் முக்கியம் என ஹவுஸ் மேட்ஸ்-ஐ (Housemates) ஒன்று திரட்டிய பவா செல்லதுரை, தனது கதையை தொடங்கினார். போனமுறை எழுத்தாளர் ஆதவனின் 'ஓட்டம்' கதையை உணர்ச்சிகரமாக கூறிய பவா செல்லதுரை, இந்த முறை பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய 'சிதம்பரம் நினைவுகள்' பற்றி பேசினார். மலையாள எழுத்துலகில் புகழ்பெற்ற கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.
இவர் தன் வாழ்க்கையில் கடந்த சம்பவங்களை உண்மைத்தன்மை மாறாமல் கட்டுரையாக எழுதியிருக்கிறார். அதன் மொழிபெயர்ப்பு தான் 'சிதம்பரம் நினைவுகள்'. அந்த கட்டுரைகளில் ஒன்றின் சுருக்கத்தை தனது பானியில் கூறிய பவா, வேலை பார்த்துக்கொண்டிருந்த பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, மதிய வேளையில் லீவு போட்டு வீட்டில் படித்துக்கொண்டிருந்தார். அப்போது, ஊறுகாய் விற்க வந்த பெண் இடுப்பைக் கண்டு வெண்ணெய் கட்டிபோல் இருந்ததாக எண்ணி அவரது இடுப்பைத் தொட்டுள்ளார் எனக் கூறினார்.