ஈஷா அறக்கட்டளை சார்பில் காவிரி நிதியைப் பாதுகாக்க அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரக்கன்றுகள் நட வலியுறுத்தும் காவிரியின் கூக்குரல் என்ற நிகழ்ச்சி சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், திரைப்பட நடிகையும், இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம், ஈஷா அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பேசுகையில், "மரங்கள் இருப்பதால்தான் ஓசோன் பாதுகாக்கப்படுகிறது. நீர்வளம் பெருகுகிறது தமிழ்நாடு அரசு இதுவரை பல்வேறு திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மரங்கள் நட்டுள்ளது. குறிப்பாக தேக்கு மரக்கன்றுகள் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 2.40 லட்சம் எண்ணிக்கையில் நடப்பட்டுள்ளன.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பனை விதைகள் தமிழகத்தில் நடப்பட்டுள்ளன. இதேபோல் நடப்பாண்டில் இரண்டு கோடியே 50 லட்சம் பனை விதைகள் நடத்திட்டமிடப்பட்டுள்ளன. மரங்களை நட்டால் தமிழகம் பசுஞ்சோலைவனமாகும். 242 கோடி மரங்கள் நடும் திட்டம் வரவேற்கத்தக்கது. இந்த நடவடிக்கைக்கு சத்குருவிற்கு மாநில அரசு துணை நிற்கும்" என்றார்.