சென்னை:கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) தலைமைக் காவலர் விஜய் பிரதாப் சிங் என்பவர் திடீரென பணியில் இருந்த சக ஊழியர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.
இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமைக் காவலர்கள் மோகன் சிங், சுப்புராஜ் , உதவி காவல் ஆய்வாளர் கணேசன் ஆகியோர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமைக் காவலர் விஜய் பிரதாப் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆயுள் தண்டனை
இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், தலைமைக் காவலர் விஜய் பிரதாப் சிங்கிற்கு, மூன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து விஜய் பிரதாப் சிங் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆ.என்.மஞ்சுளா அமர்வு, “மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் தலைமைக் காவலர் விஜய் பிரதாப் சிங், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நாள்பட்ட மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இருப்பினும் இந்த உண்மை தெரியாமல், துப்பாக்கியை கையாளுவதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அனுமதியளித்துள்ளது. இந்த மனநோய் குறித்த உண்மைகளை மதிப்பிடத் தவறிய செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி, இவ்வழக்கில் தலைமைக் காவலருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் இழப்பீடு
தலைமைக் காவலர் ஒருவித மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கான மருத்துவச் சான்றுகள் உள்ளன. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் கூட, மனநலம் குன்றிய குற்றவாளிக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
இருப்பினும், இது முடிவு அல்ல. இந்திய தண்டனை சட்ட பிரிவு 84 கீழ் விதிவிலக்கைப் பயன்படுத்தி குற்றஞ்சாட்டப்பட்டவர் தண்டனை பெறாமல் சமூகத்தில் சுதந்திரமாகச் செல்வதை அனுமதிக்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் பாதுகாப்பாகக் காவலில் வைப்பதற்கான தொடர் உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டியது அவசியம்” எனக் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய விஜய் பிரதாப் சிங்கை சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள அரசு மனநல மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஒன்றிய அரசு ஏற்கெனவே வழங்கிய ரூ.10 லட்சத்துடன், தமிழ்நாடு அரசு ரூ.3 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பாமக பிரமுகர்கள் மிரட்டுகிறார்கள் - டிஜிபி அலுவலகத்தில் பெண் புகார்