தமிழ்நாடு காவல் துறையில் 2011ஆம் ஆண்டுமுதல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருபவர் ராஜகுமார். இவர் 2019ஆம் ஆண்டு சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் வங்கிக் கணக்கு, சேவைப் பதிவு ஆவணங்களைத் தூத்துக்குடிக்கு மாற்றுவது குறித்து பணியாளர்கள், அலுவலர்கள் கையூட்டு கேட்டுள்ளனர். அதற்கு ராஜ்குமார் அடிபணிய மறுத்ததால் தூத்துக்குடி சென்றவுடன் தனக்குச் சம்பளம் வரவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து, நான்கு மாதங்களாகத் தனக்குச் சம்பளம் வராததால் தனது உயர் அளுவலர்களிடம் கூறிவிட்டு வேலைக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. வேலைக்குச் செல்லாமல் ஓராண்டு ஆகிவிட்டதால்தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தனது குறைகளைத் தீர்க்காமலேயே பணியிடை நீக்கம்செய்வதற்கு முன்பாக தன்னிடம் விளக்கம் கேட்கவில்லை என ராஜ்குமார் புகார் கூறுகிறார்.