தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவிற்கு காவல் துறை பாதுகாப்பு; காவல் ஆணையர் சார்பில் கடிதம்

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என தீபா, தீபக்கை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் காவல்துறை பாதுகாப்பு வேண்டுமா? என சென்னை பெருநகர காவல் ஆணையர் சார்பில் கடிதம் கிடைக்கப்பெற்றதாக தீபக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Highcourt
Highcourt

By

Published : Nov 2, 2020, 1:48 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

வழக்கு விசாரணையின்போது ஆஜரான ஜெயலலிதாவின் உறவினர்களான ஜெ.தீபா, தீபக் ஆகியோர்,வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது ஏற்புடையதல்ல எனவும் தாங்கள் தான் ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளுக்கும் சட்டப்பூர்வ வாரிசுதாரர் என்றும் வாதிட்டனர். வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.

அதே நேரத்தில், ஜெயலலிதாவின் 188 கோடி ரூபாய் மதிப்பிலான மற்ற சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை தீபா, தீபக் ஆகியோர் தரப்புக்கு வழங்கியதோடு, அவர்கள் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் என அறிவித்து அவர்களுக்கு அவர்களின் சொந்த செலவில் அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் ஏற்கனவே தீபா தீபக் நீதிமன்றத்தில் குறிப்பிட்டதைப் போல சொத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை அவர்களது அத்தையான ஜெயலலிதாவின் பெயரில் அறக்கட்டளையாக தோற்றுவித்து அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (நவம்பர் 2) நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனக்கும், தனது அக்கா தீபாவுக்கும் காவல்துறை பாதுகாப்பு வேண்டுமா? என கேட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென கோரப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞரும் அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details