இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று உலக மாற்றுத் திறனாளிகள் நாளையொட்டி, அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
22 ஆண்டுகளுக்கு முன்பு, உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு மக்கள் மன்றம் என்ற அமைப்பை நிறுவினேன். சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வுப் பணிகளை மனநிறைவுடன் செய்துவருகின்றேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கான கருவிகளை, மத்திய மாநில அரசுகள் இலவசமாக வழங்கிவருகின்றன. நாடாளுமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசி இருக்கின்றேன்.
முன்னேறிய நாடுகள் பலவற்றில், பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகளும் மற்றவர்களைப் போலத் தடை இன்றிச் செல்வதற்கும், பேருந்துகள், ரயில்களில் பயணிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து இருக்கின்றார்கள்.