சென்னை:ஒவ்வொரு நாளும் உறங்கப்போகும் முன் தமிழின மீட்சிக்கு இன்று நாம் என்ன செய்தோம் என்பதை எண்ணிப் பாரீர் என்று வேண்டுகோள் வைத்தார் அன்பழகன். அதனை மனதில் நிறுத்தி ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் செய்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இனமானப் பேராசிரியர் அன்பழகனார் நூற்றாண்டு விழா நிறைவு பெற்று, 101ஆவது பிறந்தநாள் இன்று! இனமானமும், தன்மானமும், மொழி உணர்வும், இன உணர்வும் பிறந்த நாள் இன்று.
ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர், 1967-1971 வரையில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், இருமுறை கல்வித்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சமூகநலத்துறை அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஐந்தாம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்ற 2006-2011 காலத்தில் நிதியமைச்சர், 1977ஆம் ஆண்டு தொடங்கி 2020 வரையிலும் திமுகவின் பொதுச் செயலாளர் எனத் தமிழ்நாட்டின் அரசியலிலும் திமுகவின் வரலாற்றிலும் எவராலும் அழிக்க முடியாத் தடத்தை விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன்.
சுயமரியாதை இயக்க காலந்தொட்டு இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்காலம் வரையில் தனது உரையால் வழிநடத்திக்கொண்டு இருந்த பேராசிரியர் அன்பழகன் இப்போதும் உணர்வால் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்.
பகுத்தறிவுப் பகவலன் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரைப் போலவே இனமானப் பேராசிரியர் அவர்களின் சிந்தனையும் தொண்டும் கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாட்டுக்கு முழுப்பயனைக் கொடுத்த மூலக்கருத்தியல் சிகரம் ஆகும். திராவிடவியல் கோட்பாட்டுக்கு விளக்கவுரை தீட்டியவர் மட்டுமல்ல, விளக்காகவும் இருந்தவர் அன்பழகன். அவர் காட்டிய இனமான ஒளியில் நமது பயணம் தொடர்கிறது.