சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று சிண்டிகேட் குழு கூட்டம் பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து துணைவேந்தர் வேல்ராஜ் கூறும்போது, ”தமிழ்நாடு அரசினால் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அரசாணைகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்படுத்துவதற்கு சிண்டிக்கேட் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதில், அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58இல் இருந்து 60ஆக உயர்த்தப்பட்டதற்கு இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குவது குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாடத்திட்ட மாற்றங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. கல்வியியல் குழுவின் அனுமதியுடன் பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டு அதன் பின்னர் முறைப்படி அனுமதி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்.
மேலும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பணி வரன்முறைப்படுத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், உயர்கல்வி செயலாளர் கார்த்திகேயன்,தொழில்நுட்ப கல்வி இயக்குநர் லஷ்மி பிரியா ,தனியார் கல்லூரிகளின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ள சிண்டிகேட் உறுப்பினர்கான பனிமலர் கல்வி குழுமத்தின் செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் சின்னதுரை, ஆர் எம் கே கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் கிஷோர், கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி தலைவர் மலர்விழி, கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வர் சுகந்தி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி