பெங்களூரு: தமிழ்நாட்டில் 1991ம் ஆண்டு முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. 4 பேரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்துக்களை சேர்த்தது கண்டறியப்பட்டது. இந்த வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்ட நிலையில், தனி நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பு அளித்த தனி நீதிமன்றம், 4 பேருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், சிறை தண்டனை உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், கர்நாடகா அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை 2017ம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், தனி நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என அறிவித்தது.