சென்னை: 'தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது, கஞ்சா விற்பனை அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. ஆனால், அதனை மறைத்துப் பேசுகிறார்கள். கஞ்சா விற்பனை செய்பவர்களுக்குத் தடையாக இருந்ததாலேயே பெரம்பூரில் அதிமுக பகுதி செயலாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்' என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அதிமுக ஆட்சி காலத்தில் 110 விதியின் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் பட்டியல் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். 68 விழுக்காடு அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 29 விழுக்காடு அறிவிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என நிதியமைச்சர் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடுகிறார்.
மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதன் முதலில் தொடங்கியது அதிமுக ஆட்சிக் காலத்தில் தான். அட்சயப் பாத்திரம் திட்டத்தின் மூலமாக சென்னை மாநகராட்சி பள்ளியில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. அந்த திட்டத்தை முதன்முதலாக தொடங்கியது, அதிமுக தான்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. விழுப்புரத்தில் கடை ஊழியர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கஞ்சா விற்பனை அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. ஆனால், அதனை மறைத்துப் பேசுகிறார்கள். கஞ்சா விற்பனை செய்பவர்களுக்குத் தடையாக இருந்ததாலேயே பெரம்பூரில் அதிமுக பகுதி செயலாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.