சென்னை:புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பி பெற்றுக் கொள்வதாக கடந்த மே மாதம் அறிவித்தது. மக்களிடம் இருக்கும் பணத்தை வங்கி மூலமாக மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கி அவகாசம் கொடுத்த நாள் இன்றுடன் (அக் 7) முடிவடைகிறது.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 2016இல் அறிவிக்கப்பட்ட நிலையில், பணப்புழக்கத்தை அதிகரிக்க 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த மே மாதம் 2,000 நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
பின்னர், இந்தியா முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற அக்டோபர் 7ஆம் தேதி கடைதி நாள் என கால அவகாசத்தை நீட்டித்தது. எனவே, ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அதனை மாற்றுவதற்கான கடைசி நாள் இன்றுடன் நிறைவடைகிறது.