குரோம்பேட்டையில் உள்ள குரோம் தோல் நிறுவனத்தின் 1.55 ஏக்கர் இடத்தை தனது அதிகாரத்தை பயன்படுத்தி உறவினர்களுக்கு முறைகேடாக ஒதுக்கிக் கொடுத்த வழக்கில் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி அழைப்பாணை!
சென்னை: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனை நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியுள்ளது.
கடந்த 1982ஆம் ஆண்டு குரோம் தோல் நிறுவனத்தின் தலைவராக ஜெகத்ரட்சகன் இருந்துள்ளார். அதன் பிறகு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அந்த இடத்தை அரசு கைப்பற்றி நீர் மேலாண்மை பகுதியாக அறிவித்து அடிக்கல் நாட்டியது. அப்போது மக்களவை உறுப்பினராக இருந்த ஜெகத்ரட்சகன் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் 41 பேருக்கு அந்த இடத்தை ஒதுக்கியுள்ளார்.
மேலும் தனது உறவினர்கள் உட்பட 41 பேருக்கு முறைகேடாக இந்த 1.55 ஏக்கர் நிலத்தை வழங்கியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராமகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை, சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் இந்த விவகாரத்தில் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியுள்ளது.