தென்சென்னை காவல் இணை ஆணையர் லட்சுமி திடீரென்று பணியில் இருந்து விருப்ப ஓய்வு கேட்டு, தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளார். எனினும், இதுவரை இவரது விருப்ப ஓய்வு கடிதத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், உயர் காவல் துறை அலுவலர்களும் இவரது விருப்ப ஓய்வு கடிதத்தை திரும்பப்பெற வற்புறுத்தி வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐ.பி.எஸ் அதிகாரியான லட்சுமி, நேர்மையான, துணிச்சல் மிக்க பெண் அலுவலர் என்ற பாராட்டைப் பெற்றவர். 24 ஆண்டுகள் தமிழ்நாடு காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றியுள்ள இவருக்கு இன்னும் 11 ஆண்டுகள் (2032 வரை) காவல் துறையில் பணியாற்ற கால அவகாசம் உள்ளது. தற்போது டி.ஐ.ஜி பதவியிலுள்ள இவருக்கு கூடுதல் டி.ஜி.பி வரை பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
சென்னையில் தியாகராயநகர், மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் துணை ஆணையராகவும், கோவையில் துணை ஆணையராகவும் பணிபுரிந்துள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து காவல் துணை, இணை ஆணையராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.