கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மீறி பல்வேறு பொதுமக்கள் வெளியே சுற்றி வருகின்றனர்.
காவல் ஆணையர் வெளியிட்ட விழிப்புணர்வு படம் குறிப்பாக பொதுமக்கள் வெளியே வராமல் தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண் காவலர்கள் சாலைகளிலும்,ரோந்து பணியிலும், மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அயராமல் உழைக்கும் பெண் காவலர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக 'கரோனா விழிப்புணர்வு கீதம்' என்ற குறும்படத்தை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் இன்று வெளியிட்டார்.
இந்தக் குறும்படத்தினை காவல் ஆணையர் ஆலோசனையின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் bestie, jod events, stage show India ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இன்சமாம் அல் ஹக் எழுதிய பாடலுக்கு இசையமைப்பாளர் சத்யா இசையமைத்துள்ளார்.