தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கலுக்குப் பேருந்துகள் இயங்குமா..? போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை பேச்சுவார்த்தை..! - அமைச்சர் சிவசங்கர்

Transport Workers: போக்குவரத்துறைத் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நாளை (ஜன.08) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தொழிலாளர் நல ஆணையரகம் அழைப்பு விடுத்துள்ளது.

Labor Welfare Commission call for talk with transport union representatives tomorrow
போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 2:57 PM IST

சென்னை:சேவைத்துறையில் பணியாற்றி வரும் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஒய்வூதியத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் 5ஆம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை என்றும் ஒரு நாள் அவகாசம் அளித்தால் நிதித்துறையுடன் பேசிவிட்டுக் கூறுவதாகவும் போக்குவரத்துறைத் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தொழிலாளர் தனி இணை ஆணையர் 25 தொழிற்சங்கத்திற்கும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் 8 நிர்வாக இயக்குநர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், “5வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாகக் கடந்த ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கங்கள் பொங்கலுக்குப் பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தற்பொழுது மிகுந்த சிரமத்தில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படி உயர்வினை மட்டும் உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, நிர்வாகம் தரப்பில் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, சுமுக முடிவை எட்டும் வகையில் கால அவகாசம் கேட்டதால், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதில் தொழிற்சங்கங்களுக்கு உடன்பாடு இல்லாததால், 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். எனவே, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பொது மக்களுக்கு மிகுந்த சிரமமும், அரசின் நற்பெயருக்குக் குந்தகமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, வரும் 8ஆம் தேதி (நாளை) காலை 12 மணி அளவில் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில், கோரிக்கை மனுக்கள் அளித்த தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர்கள் கலந்து கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

மேலும், வேலை நிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும், பொது அமைதி காத்திடுமாறும் சமரச பேச்சுவார்த்தையின் மூலம் சுமுக முடிவினை எதிர் நோக்கலாம் எனவும் அதில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அனைத்து போக்குவரத்து மேலாண்மை இயக்குநர்களும் 9ஆம் தேதி ஒட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட யாரும் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர், ஊழியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உட்படப் போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் வரும் 9ஆம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும். யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை.

வார விடுமுறை அல்லது பணி ஓய்வில் இருப்பவர்களும், உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கையும், போராட்டத்தில் கலந்து கொள்ளத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கனவே கூறியபடி, இன்று பேச்சுவார்த்தை நடைபெறுவது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் தொழிற்சங்கத்தினருக்குத் தெரிவிக்கவில்லை எனத் தொழிற்சங்க நிர்வாகி தெரிவித்தார். இந்நிலையில், தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:வேலூர் அருகே 12 பேர் உயிரிழந்த ரயில் விபத்து - ரயில் ஓட்டுநரின் 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து!

ABOUT THE AUTHOR

...view details