சென்னை:சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத், "தமிழ்நாடு அரசு கரோனாவை சரியாக கையாண்டு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
லேப் டெக்னீசியன் படிப்புக்கு குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு நிறுவனங்கள் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களை வைத்து நடத்தி வருகின்றன. இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படுவதால் கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். மருந்து கடைகளில் ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இது சட்டத்திற்குப் புறம்பானது. இதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ கழிவுகளை நோய்த் தொற்று ஏற்படாத வகையில் முறையாக அகற்ற வேண்டும். தனியார் நிறுவங்னகளுக்கு மருத்துவ கழிவுகளை அகற்ற தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் அந்த நிறுவனங்கள் சரியாக கழிவுகளை அகற்றுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே மருத்துவ கழிவுகளை அகற்ற அரசு சார்பில் தனியாக நிறுவனங்களை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் கரோனா காலத்தில் பணி செய்த அனைத்து லேப் டெக்னீசியன்களையும் அரசு நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி - முதலமைச்சர் மரியாதை