கு.க. செல்வம் விவகாரம்: திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க உத்தரவு - திமுக தலைவர் ஸ்டாலின்
சென்னை: தன்னை கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம் தாக்கல்செய்த மனுவுக்கு திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் பாஜக தலைவர் நட்டாவைச் சந்தித்தது, தமிழ்நாட்டில் பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது போன்ற காரணங்களால், சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கி, திமுக தலைமை ஆகஸ்ட் 13ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கு.க. செல்வம், சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், கட்சி சட்டத்திட்டத்தின்படி, உறுப்பினரைக் கட்சியிலிருந்து நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
மேலும், கட்சி அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கமளித்தும், எந்த விசாரணையும் நடத்தாமல், தன்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கூடுதலாக லிஃப்ட் அமைக்க வேண்டும் என்பதற்காகவே, ரயில்வே அமைச்சரைச் சந்திக்கச் சென்றதாகக் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பாஜகவில் இணைய வரவில்லை என்பதை விளக்கியிருந்ததாகவும், ஆனால் தன்னை கட்சியிலிருந்து நீக்கியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த 17ஆவது உதவி நகர உரிமையியல் நீதிமன்றம், இந்த மனுவுக்கு செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டது.