தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை தமிழ்நாடு அரசு சமீபத்தில் நடைமுறைப்படுத்தியது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவிக்க சிலரோ, ஆகம விதிகளை தமிழ்நாடு அரசு மீறுவதாக கொதித்தனர்.
சூழல் இப்படி இருக்க பாஜகவின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் வீடியோ விவகாரம் அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது.
ராகவன் வீடியோவை வெளியிட்ட பத்திரிகையாளர், பெண்களிடம் பாலியல் சீண்டல் பாஜகவில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்று கூறுவதன் மூலம் பாஜகவில் பெண்களின் பாதுகாப்பு நிலையை சாதாரணமாக கடந்து செல்லக்கூடாது என அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது.
வீடியோவை வெளியிட்ட பத்திரிகையாளர், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் ராகவன் குறித்த விஷயத்தை முன்கூட்டியே கூறியும் அண்ணாமலை எதற்காக விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதேசமயம், அந்த பத்திரிக்கையாளரிடம் வீடியோ ஆதாரத்தை தான் கேட்டதாகவும், அதற்கு அந்த வீடியோவை தர அவர் மறுத்ததாகவும் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். நிலைமை இப்படி இருக்க அண்ணாமலையிடம் ராகவன் குறித்த வீடியோவை பத்திரிக்கையாளர் கொடுக்க மறுத்தது ஏன்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இது ஒன்றும் புதிதல்ல
ராகவனுக்கு நெருக்கமானவர் என்று கட்சியினரால் அறியப்படும் விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி கலிவரதன் கடந்த மாதம் பாலியல் புகாரில் சிக்கினார்.
அவர், மாவட்ட மகளிரணி தலைவி பொறுப்பு வாங்கி தருவதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் ரூபாய் 5 லட்சம் வாங்கிக் கொண்டதாக பெண் ஒருவர் புகாரளித்திருந்தார்.
அதேபோல் கலிவரதன் தங்களை ஏமாற்றிவிட்டதாக இரண்டு பெண்கள் சாபம் விடும் ஆடியோ வெளியானது. ஆனால், இவர் மீது புகார் அளித்த பெண் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
சி.டி. ரவியின் கொந்தளிப்பு
கடந்த ஜூன் மாதத்தில் பாஜகவின் தேசிய செயலரும், மேலிட பார்வையாளருமான சி.டி. ரவி தலைமையில் சட்டப்பேரவை தேர்தல் தோல்வி மற்றும் பெண்கள் விவகாரத்தில் கட்சிக்கு வந்துள்ள புகார்கள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பேசிய ரவி, “எங்களிடம் வந்த புகார்களின் நம்பகத்தன்மையை விசாரித்துவிட்டுதான் வந்து பேசுகிறேன்.
மேலும் விசாரணையில் தெரியவந்துள்ள குற்றச்சாட்டு அனைத்தும் அறுவெறுப்பின் உச்சக்கட்டம்.
ஒரு தலைவர் மீது மட்டும் சுமார் 134 புகார்கள் வந்துள்ளன. அவ்வளவு புகார்கள் வந்த தலைவர்கள் மீது மக்கள் மற்றும் நிர்வாகிகள் எந்த அளவுக்கு கோபத்தில் இருந்திருப்பார்கள்.
இதுபோல சம்பவங்களை தவிர்க்க இனி தமிழ்நாடு பாஜக தலைவர்கள் யாரும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு செல்லக்கூடாது.