தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில், 'காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, மக்களிடம் வறுமையைப் போக்குவதற்காக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013இல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அன்று இருந்த 122 கோடி மக்களில், 67 விழுக்காடு மக்களுக்கு (81 கோடி) ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ஒன்றுக்கு 1 கிலோ அரிசி - ரூ.3, கோதுமை - ரூ.2, பருப்பு- ரூ.1 என்ற அளவில் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ தானியங்கள் வழங்குவது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால், 25 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும். இதற்குத் தேவைப்படும் உணவு தானியங்களின் அளவு 7 கோடி டன் ஆகும். இதற்காக அன்றைய மத்திய அரசு வழங்கிய மானியம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 247 கோடி ரூபாய். இந்த வறுமை ஒழிப்புத் திட்டத்தை 2014இல் ஆட்சிக்கு வந்த பாஜக செயல்படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டவில்லை. இந்தத் திட்டத்தின்படி, தானியங்களுக்குப் பதிலாக நேரடி பயன் மாற்றத்தின்மூலம் பணமாக வழங்குவதற்கு முயற்சி செய்தது. ஆனால், இதற்கு எதிர்ப்பு எழுந்த காரணத்தால், ஆதார் அட்டையை அடிப்படையாக வைத்து 2017 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று காரணமாக, கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிற சமயத்தில், பொது விநியோகத்துறை மூலம் உணவு தானியங்கள் விரைவாக வழங்கப்படவேண்டும். ஆனால், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, மொத்த பயனாளிகளான 80.3 கோடி மக்களில், 60.3 கோடி மக்களுக்குத்தான் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. கரோனாவால் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், நாடு முழுவதும் விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட 12 மில்லியன் டன் உணவு தானியங்களில், 6.8 மில்லியன் டன் தான் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. பொது விநியோகத்துறை மூலம், உணவு தானியங்கள் காலதாமதத்தோடு வழங்கப்படுவதால், வறுமையில் சிக்கியிருக்கிற ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உணவு தானியங்கள் அனைத்து மக்களுக்கும் விரைவாக சென்றடைவதற்கு மத்திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும்.