இதுகுறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இதை காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல.. தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது ஆறுதலைத் தருகிறது.
மக்களவைத் தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் ராகுல்காந்தி. அவரது பரப்புரையால் பிரதமர் நரேந்திர மோடி திக்குமுக்காடி போனார். மோடியின் பரப்புரை தரம் தாழ்ந்த நிலையிலும், ராகுல்காந்தி எள்ளளவும் வெறுப்பில்லாமல் எதிர்கொண்டார். இந்தியாவின் கருத்தியலுக்கு எதிராக மக்களிடையே மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலுக்கு, மக்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இதன்மூலம் நாட்டு மக்களிடையே பாதுகாப்பு குறித்து அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.
இந்திய மக்களை ஒன்றுபடுத்தி, நம்பிக்கையூட்டுகிற பணியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவருக்கும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தவிர, பதவியை தேடிச் செல்வதல்ல. காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதே. இது வீழ்ச்சியல்ல. ஒரு சருக்கல் தான். இதிலிருந்து மீண்டு எழுவோம்.
எனவே, காங்கிரஸ் தலைமை பொறுப்பை ராகுல்காந்தி தொடர வேண்டும் என்பதே தமிழக காங்கிரஸ் கட்சியினரின் விருப்பமாகும். இதன் மூலம் வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வலிமையுடன் நடத்தி, இந்தியாவையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கிற பணியில் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.