தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெகாசஸ் விவகாரத்தில் மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் - கே.எஸ். அழகிரி - chennai latest news

பெகாசஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு குழு அமைப்பதைவிட, மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்

By

Published : Aug 17, 2021, 6:38 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மாவட்ட உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், நேற்று (ஆக. 16) சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, சென்னை முதல் கன்னியாகுமரி வரை கண்டன சைக்கிள் பேரணி நடத்திய 56 நபர்களைப் பாராட்டி, சைக்கிள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கே.எஸ். அழகிரி

பெகாசஸ் மூலமாக உளவு

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, மக்களவையில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய பெகாசஸ் விவகாரம் குறித்து பேசினார். அவர் பேசியதை படிக்கும்முன், பெகாசஸ் குறித்த முன்கதையை அறிந்துகொள்வோம்.

இஸ்ரேலிய நாட்டின் உளவு மென்பொருளே பெகாசஸ். இதனை ஒருமுறை கணினியிலோ அல்லது வேறு ஏதேனும் மின்னணு சாதனத்திலோ நிறுவிவிட்டால், அதனை நீக்குவது எளிதான காரியமல்ல.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள்

இந்நிலையில் பெகாசஸ் மென்பொருள் மூலமாக, இந்தியாவின் ஒன்றிய அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நீதிபதிகள், செய்தியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் உளவுபார்க்கப்பட்ட விஷயம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உள்ளாக்கியது.

காங்கிரஸ் மீது பழி சுமத்தல்

இது குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பின. கேள்வி எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதில் பலமுறை நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று (ஆக. 16) தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசியதாவது:

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள ஒன்பது மாவட்டங்களின் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றிபெற, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட முடிவுசெய்யப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை, உடனடியாகத் தொடங்கவும் முடிவுசெய்யப்பட்டது. தமிழ்நாடு அரசைப் போல, ஒன்றிய அரசும் கலால் வரியைக் குறைத்தால் பெட்ரோல் விலை குறையும். ஒன்றிய அரசானது வரியைக் குறைக்காமல், காங்கிரஸ் மீது பழி சுமத்துகிறது.

ஒன்றிய அரசுக்குத் தயக்கம் ஏன்?

உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கான இடங்களைக் கேட்டுப்பெறுவோம். உள்ளாட்சித் தேர்தலில் கிராம அளவில் போட்டியிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியும் என்றால், ஒன்றிய அரசால் ஏன் குறைக்க முடியாது?

பெகாசஸ் விவகாரத்தில், ஒன்றிய அரசு குழு அமைத்து விசாரணை செய்வதைவிட, மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும். மக்களவையில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த, ஒன்றிய அரசு ஏன் தயங்குகிறது?

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:பெகாசஸ் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளையும் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details