சென்னை:ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் உத்தம்குமார் ரெட்டி ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய உத்தம்குமார் ரெட்டி, தேசிய சொத்துக்களை மோடி தலைமையிலான அரசு தனியாருக்கு வழங்கி வருகிறது என்றும், அதானி போன்ற தனி முதலாளிகளை வாழவைக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
அதேபோல் அதானியை காப்பாற்றும் நோக்கில் மோடி அரசு மௌனமாக உள்ளது என மீண்டும் குற்றம் சாட்டிய அவர், காங்கிரஸ் காலத்தில் எந்த தனிநபரையும் உருவாக்கவில்லை என விளக்கம் அளித்தார். இதனையடுத்து பாஜகவை தவிர எந்த கட்சியும் அதானியை ஆதரிக்கவில்லை என கூறிய அவர், அதானி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் கௌதம் அதானி சர்வதேச நிதி மோசடி செய்துள்ளதாகவும், வினோத் அதானி பனாமா தாள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், இருப்பினும் புலனாய்வு அமைப்புகளை அதானி நிறவனத்திற்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர் எனவும் உத்தம்குமார் குற்றம் சாட்டினார். அதேநேரம் மோடி அரசு எல்ஐசி நிறுவனத்தை நிர்பந்தப்படுத்தி, அதானி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதில் செபி அமைப்பு, அதானி நிறுவன மோசடிகளை முன் கூட்டியே கண்டறிந்து மத்திய நிதி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது என்றார். மேலும் 6 விமான நிலையங்களை அமைக்க அதானி நிறுவனத்திடமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், மோடி ஆட்சிக்கு முன் அதானி நிறுவனத்திடம் ஒரு துறைமுகம் மட்டுமே இருந்தது எனவும், தற்போது 13 துறைமுகங்கள் அதானி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் பேசினார்.
இவை இந்தியாவின் 30 சதவீத துறைமுகங்கள் என கூறியவர், 40 சதவீதம் கண்டைனர்கள் இந்த துறைமுகத்தை கடந்து செல்வதாக தகவல் அளித்துள்ளார். மேலும் 2017ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு நிறுவன ஒப்பந்தம் விதிமுறைகளை மீறி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டையும் உத்தம்குமார் முன் வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கே.எஸ்.அழகிரி, மூன்று நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரம் செய்ததாக தெரிவித்தார். மக்களை சிறை பிடித்ததாக அதிமுகவினர் இல்லாத குற்றச்சாட்டை பரப்புவதாக கூறிய அவர், தோல்வி பயத்தில் அதிமுக குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார்.