சென்னை:தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழை பாதிப்பினாலும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் வரத்து குறைவு காரணமாகவும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் 30 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த தக்காளி நேற்று 100 ரூபாய்க்கும் மேலாக அதிகரித்தது. குறிப்பாக, நேற்று (மே 21) சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாய் வரை விற்பனையானது.
நவீன் தக்காளியின் விலை 100-120 ரூபாய் வரையும், நாட்டு தக்காளியின் விலை 80-100 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. பொதுமக்கள் சிரமத்தை போக்க அரசின் பசுமை பண்ணையில் தக்காளி கிலோ 70 முதல் 85 ரூபாய் வரை விற்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ‘இந்த விலை குறைப்பினால் நேற்று பிற்பகல் வரை, பசுமை பண்ணையில் 250 கிலோ தக்காளி விற்பனையானது’ என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.