சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோல் வங்கி ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் தோல் வங்கிக்குத் தேவையான தோலினை இறந்தவரின் உடலிலிருந்து பெறுகின்றனர். அதே போல் பல்வேறு பதப்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த தோலைத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சைக்கு ஐந்து ஆண்டுகள் வரைப் பயன்படுத்த முடியும்.
இதுகுறித்து அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் வசந்தாமணி கூறும்போது, 'கண் தானம் அளிக்கும் அனைவரும் தோலையும் தானமாக அளிக்க முடியும். அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் இறந்தவர்கள் குறித்து விபரம் தெரிவித்தாலும், நாங்களே நேரில் வந்து தோலைப் பெற்றுக் கொள்வோம். கடந்த 2018ஆம் ஆண்டில் எட்டு பேர் தோல் தானம் அளித்தனர்.
அதனை தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட எட்டு பேருக்கு பயன்படுத்தி உள்ளோம். 2019ஆம் ஆண்டில் இதுவரை 14 நபர்கள் தோலை தானமாக அளித்துள்ளனர். அவற்றில் எட்டு நபர்களின் தோல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆறு நபர்களின் தோல்கள் பதப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சுமார் பத்து நபர்கள் வருகின்றனர்.
ஆனால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான அளவு தோல் தானமாகக் கிடைக்கவில்லை. இறந்தவர்களின் உடல்களில் உள்ள தோலினை தானமாக அளிக்க உறவினர்கள் முன்வர வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.