சென்னை: ஶ்ரீரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைதன்யா தயாரிப்பில் உருவான படம் 'கிடா' (Goat). அறிமுக இயக்குநரான ரா.வெங்கட் இயக்கத்தில் பூ ராமு, காளி வெங்கட் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களாக நடித்த இப்படம் இந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியானது.
நல்ல பாராட்டுகளை பெற்ற இப்படம் திரையரங்குகளில் போதிய வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் யதார்த்த வாழ்வியலை அழகாகச் சொல்லும் ஒரு அழுத்தமான கலைப் படைப்பாக உருவாகியுள்ள 'கிடா' திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
பூ ராமு, காளி வெங்கட் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரமாக நடித்துள்ள இந்த திரைப்படம், மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக உள்ளது. தனது பேரனுக்கு புதுத்துணி எடுத்துத் தர போராடும் கதைக் களத்தைக் கொண்டப் படமாக சினிமா ரசிகர்களை கவனம் ஈர்த்திருந்தாலும், ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.