சென்னை:சென்னையில் உள்ளபெரியார் திடலில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழாவில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் தமிழரசு அச்சகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள "வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு" மலரினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெற்றுக் கொண்டார்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்ததை நீக்கக் கோரி நடந்த வைக்கம் போராட்டத்தில், கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில் பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார்.
பின்பு பல நாட்கள் அங்குத் தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்து, அனைத்து மக்களிடமும் வைக்கம் போராட்டம் குறித்து தமது சீர்திருத்த, சமூக நீதிக் கருத்துக்கள் மூலம் பிரச்சாரம் செய்து, வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகின்றது.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டினையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் 2023ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஓராண்டு காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும், போராட்டத்தின் வரலாற்றையும், வெற்றியையும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2023 மார்ச் 30ஆம் தேதி விதி 110-இன் கீழ் 11 அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இதன்படி, வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகளை பல்வேறு அறிஞர் பெருமக்களிடம் இருந்து பெற்று, அதனைத் தொகுத்து வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர் என்ற சிறப்பு மலர் ஒன்றினை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரித்து வெளியிடப்படும் என்ற ஒரு அறிவிப்பும் அதில் இடம் பெற்றிருந்தது.