சென்னை: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பிரவித் சாஜன் (35). இவர் மீது எர்ணாகுளம் போலீசில், இந்த ஆண்டு தொடக்கத்தில் போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, போலீசார் பிரிவித் சாஜனை கைது செய்து, விசாரணை நடத்துவதற்காக தேடி வந்துள்ளனர்.
ஆனால், அவர் போலீசில் சிக்காமல் தப்பி தலைமறைவாகி உள்ளார். மேலும், அவர் வெளிநாட்டுக்குச் சென்று விட்டார் என்றும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து எர்ணாகுளம் போலீஸ் கமிஷனர், பிரவீத் சாஜனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசியும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (அக்.27) நள்ளிரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது, அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து அனுப்பிக் கொண்டு இருந்துள்ளனர்.
இதனிடையே இதே விமானத்தில் கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீசால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியான பிரவித் சாஜனும் வந்துள்ளார். இந்த நிலையில், அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் பரிசோதித்தபோது, இவர் எர்ணாகுளம் போலீசார் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவரை வெளியில் விடாமல் பிடித்து குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தனர். பின்னர், தலைமறைவு குற்றவாளி பிரவித் சாஜனை எர்ணாகுளம் போலீசாரிடம் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:கரூரில் போலி ஆவணங்களை வைத்து பாஸ்போர்ட் பெற்ற இலங்கைத் தமிழர் கைது!