காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 பிரிவை மத்திய பாஜக அரசு நேற்று நீக்கியது. இதனைக் கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினர் கண்டன போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, மே 17 இயக்கம், திராவிட இயக்க தமிழர் பேரவை, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட 30 இயக்கங்கள் சார்பாக நூற்றுக்கும் அதிகமானோர் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனை தொடர்ந்து திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன் பேசுகையில், 'ஜனநாயகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி இது. அவர்கள் நினைத்தால் எல்லா மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றி அமைப்பார்கள். இந்தியாவில் ஒரே அரசியல்தான் அது டெல்லியில் இருக்கும் என்பதை அவர்கள் தொடங்கி உள்ளனர். இதனை எதிர்ப்போம். ஜனநாயகத்திற்கு குரல் கொடுத்து தமிழ்நாடு மக்கள் என்றும் போராடுவார்கள்' என்றார்.