சென்னை: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று (நவ. 19) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சைவ ஆதீனங்கள் மற்றும் துறவிகள், யாத்திரிகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் இன்று (நவ. 20) அதிகாலை சைவ ஆதீனங்கள் மற்றும் துறவிகள், பாஜக ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் நாச்சியப்பன் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் காமாட்சிபுரி ஆதீனம் பேசுகையில், மத்திய அரசு எடுத்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியானது தமிழை மீண்டும் உயர்ந்த ஆசனத்தில் வைத்து பார்க்கக் கூடிய அளவுக்கு இருந்தது. ஒரு மாத காலம் நடைபெறுகின்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு மிக்க கலைஞர்கள், அறிவு சார்ந்த பெரியோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக இந்த நிகழ்ச்சி நமக்கு ஒரு பெரிய சிறப்பு மிக்கவையாக அமைந்துள்ளது. மத்திய அரசுக்கு துறவிகள் பெருமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி என்றார்.
மயிலம் பொம்மபுர ஆதீனம் பேசுகையில், வாரணாசியில் இறங்கி செல்லும் பொழுது பல இடங்களில் காசி தமிழ் சங்கமம் என்கின்ற சொற்கள் அடங்கிய பதாகைகள் தமிழில் மிகப் பெரிய அளவில் இருக்கின்றது. அதேபோன்று இந்தியில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மொழி, கலாச்சாரம், பண்பாடு இவற்றையெல்லாம் போற்றும் விதமாக அமைந்திருந்தது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காசி தமிழ் சங்கமம்; கோவையில் இருந்து புறப்பட்ட இரண்டாம் கட்ட ரயில்!