சென்னை: கர்நாடகா - தமிழ்நாடு இடையே காவிரி நீரைப் பங்கிடுவதில் பல ஆண்டுகள் காலமாகப் பிரச்னை இருந்து வருகிறது. நீரை முறையாக பங்கிட்டுத் தர நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியும், அதற்கு உடன்படாத கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தை நாடியது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஏற்காத அரசு, குறைவான அளவில் தமிழ்நாட்டிற்கு நீரை வழங்கி வருகிறது.
ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்ட அளவிலான டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால், தற்போது ஜூன் மாதம் வழங்கப்பட வேண்டிய 10 டிஎம்சி தண்ணீரில் 4 டிஎம்சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வழங்க வேண்டிய நீரின் அளவினைக் குறைத்தது மட்டும் போதாது என்று, தற்போது காவிரியின் குறுக்கே 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேகதாது அணையைக் கட்டி, தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் தண்ணீரின் அளவை முழுவதுமாக குறைக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டது.
டெல்டா பகுதி விவசாயத்தின் முதுகெலும்பாக காவிரி நீர் விளங்கி வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால், தமிழகத்தில் திமுக உடன் கூட்டணியில் இருப்பதால் நீர் பங்கீடில் சரியான உடன்பாடு இருக்கும் எனக் கருதிய விவசாயிகள் சமீபத்தில் முடிவடைந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலை உன்னிப்பாக கவனித்தனர்.
ஆனால், கர்நாடகத் தேர்தல் அறிக்கையிலேயே மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கப்படும் என அறிவித்து கர்நாடக காங்கிரஸ் அதிர்ச்சி அளித்தது. அதிலும் அம்மாநில துணை முதலமைச்சரும், நீர் வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் மேகதாது அணை கட்டுவதில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார்.
சமீபத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரம் சம்பந்தமாக டெல்லி சென்று ஜல்சக்தி அமைச்சரை சந்தித்துப் பேசி இருப்பதாகவும், மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக தமிழக அரசுடன் டி.கே.சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினாலும், எழுத்து மூலமாக தெரிவித்தாலும் ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம் எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பின்னர் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த ஐந்து திட்டங்களுக்கான நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளிவந்த நிலையில், மேகதாது குறித்த அறிவிப்புகள் ஏதேனும் இடம்பெறுமோ என்ற அச்சத்தில் தமிழக மக்களும் கர்நாடக பட்ஜெட் அறிவிப்பை கூர்ந்து நோக்கினர்.
அதில், கட்நாடக முதலமைச்சர் சித்தராமையா, மேகதாது அணை கட்ட மத்திய அரசிடம் தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும். முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மை பணி என்றும் கூறியுள்ளார். மேலும் மேகதாது அணைக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Tomato Price Hike: உத்தரகாண்டில் உச்சத்தைத் தொட்ட தக்காளி விலை!