தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 19, 2022, 2:35 PM IST

ETV Bharat / state

திராவகம் கலந்த குளிர்பானத்தால் சிறுவன் உயிரிழப்பு - சிபிசிஐடிக்குக்கு மாற்றம்

கன்னியாகுமரி பள்ளி மாணவன் திராவகம் கலந்த குளிர்பானத்தை குடித்து உயிரிழந்த சம்பவம், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Etv Bharat boy died due to acid cool drink
Etv Bharat boy died due to acid cool drink

சென்னை: கன்னியாகுமரி பள்ளி மாணவன் திராவகம் கலந்த குளிர்பானத்தை குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்தை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், 6-ஆம் வகுப்பு மாணவனுக்கு ஆசிட் கலந்த குளிர்பானத்தை வழங்கிய சக மாணவனால் இரண்டு கிட்னிகள் செயல் இழந்து உயிருக்கு போராடி வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் அந்த குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கன்னியாகுமரி தனியார் பள்ளி மாணவன் கொடுத்த குளிர்பானத்தில் திராவகம் கலந்தது குறித்து அன்றைய தினமே நமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு செயல்படும் பள்ளியை பள்ளி என்று கூட சொல்ல முடியாது. மத்திய அரசின் என்.ஐ.ஓ.எஸ் எனப்படக்கூடிய திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளி தான் அது.

மேலும் 2020 ஆம் ஆண்டு வரை மட்டுமே அப்பள்ளி செயல்படுவதற்கான அங்கீகாரம் மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்டிருக்கிறது என்பது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு என்பது தெரியப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பள்ளி மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும் பள்ளியில் படிக்கும் மாணவன் நமது மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதால் தேவையான நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி அப்பள்ளியில் படிக்கும் பிற மாணவர்கள் பெற்றோர் கோரிக்கை ஏற்று மாணவர்களின் நலன் கருதி அருகாமையில் இருக்கக்கூடிய மற்றொரு சிபிஎஸ்இ பள்ளிக்கு மாணவர்கள் மாற்றப்பட்டு இருக்கின்றனர். இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை இன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றவாளியை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டிருக்கிறது. பள்ளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது குறித்து காவல்துறையில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு சிபிசிஐடி ஏற்று நடத்தும் என முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆசிட் கலந்த குளிர்பானம் அருந்திய சிறுவன் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details