தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில், ‘தமிழகம் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்று திமுக தேர்தல் பரப்புரைப் பயணத்தை அறிவித்தது. அதன் முதல் கட்டமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி பிறந்த நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையிலிருந்து தடையை மீறி தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்கினார்.
தேர்தல் பரப்புரையை தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அவரை காவல் துறையினர் கைதுசெய்தனர். கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க அரசியல் கூட்டங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் கைதுக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் திமுக மகளிர் அணிச் செயலாளரும், அக்கட்சியின் எம்பியுமான கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.