காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல யூடியூப்பர் டிடிஎஃப் வாசன் பைக் விபத்தில் சிக்கினார். இதனை அடுத்து அவர் மீது காஞ்சிபுரம் பாலுச்செட்டி சத்திரம் போலீசார், ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அதனை அடுத்து டிடிஎஃப் வாசனை வருகிற அக்டோபர் 3ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில், போலீசார் டிடிஎஃப் வாசனை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, புழல் சிறை கைதியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டிடிஎஃப் வாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர்கள் தரப்பில், அவர் கைது செய்யப்பட்ட அன்றைய தினமே ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதன் வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி, மாவட்ட நீதிபதி செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆகியோர் ஆஜராகி தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், டிடிஎஃப் வாசன் மீது ஏராளமான போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் உள்ளது என்றும், தமிழகத்தில் மட்டுமல்லாமல் இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இவர் மீது போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் உள்ளதை சுட்டிக்காட்டி, டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என வாதிட்டார். அதனை அடுத்து, நீதிபதி செம்மல் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.