சென்னை: ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் ஆதரவு கோரியிருந்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் செயற்குழு கூட்டத்தில் ஆலோசித்து கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் குறித்து ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நாளை காலை 11 மணியளவில் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டமானது நடைபெற உள்ளது.