சென்னை:கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் முதலமைச்சரின் கள ஆய்வு திட்டம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், சரியாகச் செயல்படாத கள்ளக்குறிச்சி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அதிரடியாகக் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கள ஆய்வுக் கூட்டத்தை 26,27 ஆகிய தேதிகளில் நடத்தினார். அப்பொழுது கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் நான் ஆய்வு செய்த தகவல்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என அதற்கு ஏற்ப பணிகளை முடக்கி விட்டு உள்ளீர்கள். அதுபோன்று செய்யாமல் அனைத்து பணிகளும் திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டுமென மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இந்த மாவட்டங்களில் பணிகள் நன்றாக நடைபெறவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, கள்ளக்குறிச்சி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலரைக் காத்திருப்பு பட்டியலில் அறிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வரும் சரஸ்வதி பணியிட மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் சரஸ்வதிக்கு வேறு எதுவும் பணிகள் வழங்கப்படவில்லை என்றும் இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.