சென்னை: சென்னை அடையாரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்பட்டதாக அண்மையில் புகார் எழுந்தது. கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டது. இதில் சம்மந்தப்பட்ட பேராசிரியர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து பாலியல் தொல்லை தொடர்பாக முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்தனர். பின்னர் மாணவிகள் புகாரின்படி, ஹரிபத்மன் உள்ளிட்ட 4 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகளால் மிகவும் வேதனையடைந்த, கல்வி நிறுவன உள் புகார்கள் குழுவின் உறுப்பினரும், வழக்கறிஞருமான அஜிதா ராஜினாமா செய்துள்ளார். கலாஷேத்ரா இயக்குநருக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், "கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது மிகவும் மன வேதனை அளிக்கிறது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டம், 2013ன் கீழ் அமைக்கப்பட்ட உள் புகார்கள் குழுவின் உறுப்பினராக கல்வி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.