ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி - வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கும் முதலமைச்சர் - மாரத்தான் போட்டி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவுநாளில் நடைபெறும் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதலமைச்சர் பரிசுகளை வழங்குகிறார்.

கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி
கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி
author img

By

Published : Jul 31, 2022, 5:13 PM IST

சென்னை:ஆகஸ்ட் 7ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளில் நடைபெறும் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டிக்கான இறுதி பதிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி, மூன்றாம் ஆண்டு கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி நேரிடையாக நடைபெறுகிறது. இதற்காக கடந்த 25 நாள்களாக சென்னையில் உடற்பயிற்சி மேற்கொள்வோரிடம் அதற்கானப் பதிவு நடத்தப்பட்டு வருகிறது.

இம்மாரத்தான் போட்டியில் இந்தியாவிலிருந்து 19 மாநிலங்களைச்சேர்ந்தவர்களும், அமெரிக்கா, இங்கிலாந்து, வடகொரியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பதற்காகப் பதிவு செய்துள்ளனர். இன்று இரவு 12 மணி வரை இணையதளப்பதிவு நடைபெறுகிறது. இப்பதிவில் 10ஆயிரம் பேர் வரை பதிவுசெய்யப்பட்டு 40 ஆயிரம் பேர் வரை இப்போட்டியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இப்போட்டியும் ஆசிய சாதனைப்படைக்க இருக்கிறது. இந்தாண்டு நேரடியாக நடைபெறுகிறது. இதில் 42 கி.மீ., மற்றும்
21.1 கி.மீ. பிரிவுப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு 50 ஆயிரம், மூன்றாம் பரிசு 25 ஆயிரமாகும். 10 கி.மீ. பிரிவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு 25 ஆயிரம், மூன்றாம் பரிசு 15 ஆயிரமாகும்.

5 கி.மீ., பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு 15 ஆயிரம், மூன்றாம் பரிசு 10 ஆயிரமாகும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 7ஆம் தேதி கருணாநிதி நினைவு நாளில் இப்பரிசுகளை வழங்குகிறார். இப்போட்டி பெசன்ட் நகரில் தொடங்கி மாநிலக் கல்லூரி வரை சென்று, திரும்ப இருக்கிறது.

நான்கு பிரிவுகளாக 40 ஆயிரம் பேர் பங்கேற்கும் இந்த மாரத்தான் போட்டியில் தமிழ்நாட்டின் கிராமியக் கலைகளை விளக்கும் தும்பியாட்டம், உருமிமேளம், பம்பை போன்ற பத்திற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் ஓடுபவர்களை உற்சாகப்படுத்தி இசை நிகழ்ச்சி நடத்த இருக்கின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில் புதுக்கோட்டை செந்தில், நாகலட்சுமியின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 5 கி.மீ., போட்டியை தி.மு.கழக இளைஞர் அணி செயலாளரும் - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 10 கி.மீ., போட்டியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைக்கிறார்.

21 கி.மீ., போட்டியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கிறார். 42 கி.மீ., போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார். இம்மாரத்தான் போட்டி இந்திய அளவில் அல்ல; உலக அளவில் பேசப்படும்.

இந்தாண்டு கிடைக்கும் 90 லட்சம் ரூபாயும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் தாய் சேய் மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைக்கும் கிராமப்புறங்களில் இருந்து வருகிற ஏழைத்தாய்மார்கள் பயன்பெறுகிற வகையில் அரங்கம் அமைப்பதற்கும், அறக்கட்டளை உருவாக்கி அதில் அந்த தொகையைப்பயன்படுத்துகிற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் மருத்துவத்துறை அரசு முதன்மைச்செயலாளரிடம் அதே மேடையில் ஒப்படைக்கப்படவிருக்கிறது.

இப்போட்டியில் டிஃபென்ஸ் அலுவலர்கள், கடற்படை அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் போன்ற பலதரப்பினரும் பங்கேற்கின்றனர். இளைஞர்களிடையே உடற்பயிற்சி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இப்போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் 40 ஆயிரம் பேரில், 30 ஆயிரம் பேர் புதிதாக ஓடுபவர்கள்.

அவர்களிடையே இது உடற்பயிற்சி விழிப்புணர்வைத் தூண்டும். மும்பை போன்ற பெருநகரங்களில் இம்மாரத்தான் போட்டியின்போது விழாக்கோலம் பூண்டிருக்கும். அதேபோல் சென்னை மக்களுக்கு உடற்பயிற்சி விழிப்புணர்வை ஏற்படுத்தி இப்போட்டி பெரிய அளவில் வெற்றிபெறும்” எனத் தெரிவித்தார்.

கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி முன்பதிவு

இதையும் படிங்க:டிஏபி உரத்திற்கு மாற்றாக பாஸ்பேட் உரங்களை பயன்படுத்துங்கள் – விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details