சென்னை, ரிப்பன் மாளிகையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கரோனா அவசரகால சிறப்பு வாகனத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் சித்திக் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, "250 கரோனா அவசரகால சிறப்பு வாகனங்களைத் தொடங்கியுள்ளோம். ஆக்ஸிஜன் பயன்படாத நபர்களுக்காகவும் ஆம்புலன்ஸ்கள் செல்வதனால், ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆகிறது. இதனால் ஆக்ஸிஜன் பயன்படாத கரோனா நோயாளிகள் கரோனா அவசரகால சிறப்பு வாகனத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒவ்வொரு மண்டலத்துக்கும் 15 வாகனங்கள் அனுப்பப்படும். முதல்கட்டமாக மூன்று வாகனங்கள் என அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 2,743 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் சுழற்சி முறையில் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கரோனா தொற்று சவால்களை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் விரைவில் சென்னையில் உள்ள 21 கரோனா சிகிச்சை மையங்களுக்கு ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும். தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்று சவால்களை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: சென்ட்ரல் விஸ்டா கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துங்கள்: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்