கடந்த 2008ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் தோண்டும் பணியின்போது 6 ஐம்பொன் சிலைகள் கிடைத்ததாகவும், அதை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் காதர் பாட்ஷா, உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் 6 கோடி ரூபாய்க்கு சிலைகளை விற்றதாகவும் குற்றாச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து இருவர் மீதும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சிலைகளை விற்ற காவல் ஆய்வாளர் காதர் பாட்ஷா டி.எஸ்.பியாகவும், காவலர் சுப்புராஜ் ஆய்வாளரகாவும் பதவி உயர்வு பெற்றுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை மேற்கொண்ட ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், டிஎஸ்பி காதர் பாட்ஷா, சுப்புராஜ் உள்ளிட்டோர் மீது 2017ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். பின்னர் டிஎஸ்பி காதர் பாட்ஷா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தார்.
இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி டிஎஸ்பி காதர் பாட்ஷா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 9 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், சாட்சியங்களின் வாக்குமூலங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல் தன் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது, அதனை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், காதர் பாட்ஷா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.