அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ''சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எம்எல்ஏக்கள் ஒன்று கூடி அடுத்த முதலமைச்சர்கள் தேர்ந்தெடுப்பார்கள். ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். தலைமையில் அதிமுக இயங்கும்'' என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இலக்கை நிர்ணயித்து களம் அமைப்போம். எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
அமைச்சர்கள் இருவர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்திருப்பது அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தொலைபேசி வாயிலாக அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி பழனிசாமியிடம் கேட்டபோது, "அமைச்சர்கள் தனித்தனியாக கருத்து தெரிவிப்பது அதிமுகவிற்கு நல்லதல்ல. 2017ஆம் ஆண்டில் அதிமுகவில் 11 பேர் கொண்ட குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில் நான் உள்பட மூத்த நிர்வாகிகள் இருக்க வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், வழிகாட்டி குழுவை இன்று வரை அதிமுக அமைக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வரவேண்டுமென்றால் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து, குழுவின் முடிவின் அடிப்படையில் கட்சியை வழிநடத்த வேண்டும். அவ்வாறு குழு அமைக்கவில்லையென்றால் அதிமுகவின் தேர்தல் வெற்றியை பாதிக்கும்.
அந்த 11 பேர் குழுவில் சசிகலாவை சேர்த்து கொண்டாலும் தவறில்லை. தமிழ்நாடெங்கும் செல்வாக்கு பெற்ற தலைவர் அதிமுகவில் யாரும் இல்லை. இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட காமராஜர், பக்தவச்சலம், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. ஆகவே, மக்கள் சமூதாய ரீதியில் வாக்களிப்பவர்கள் அல்ல, ஆனால் நீங்கள் சமூதாய ரீதியில் மக்களை சந்தித்தால் அவர்கள் ஏற்க மாட்டார்கள்.