சென்னை:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தனின் நாடு கடத்தல் வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி அறிவித்தார். மேலும், வழக்கறிஞராக இருந்தபோது ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் ஆஜரானதால், தற்போது வழக்கை தான் விசாரிப்பது முறையாக இருக்காது என்று கூறி, சாந்தனை இலங்கைக்கு அனுப்பக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகுவதாக நீதிபதி தெரிவித்தார்.
கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஶ்ரீ பெரும்பத்தூர் அருகே மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அவை ஆயுள் தண்டனையாகவும் மாற்றப்பட்டு கடந்த 2022 நவம்பர் 11ஆம் தேதி, கைது செய்யப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த சாந்தன் என்கிற சுதேந்திரராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவில், உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டும் தொடர்ந்து, திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். மேலும், இலங்கையில் வசித்து வரும் எனது தாய் மகேஸ்வரியை (வயது 75) தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால் பாஸ்போர்ட் வழங்குமாறு குறிப்பிட்டு இருந்தார்.