சென்னை:தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் முதன்முறையாக போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்க, சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்க்கான ஒப்பந்த உத்தரவை போயிங் இந்தியா நிறுவனத்தின் விநியோக மேலாண்மை இயக்குநர் அஸ்வனி பார்கவா வழங்க, ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்-ன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர். சுந்தரம் பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளரை சந்தித்த ஏரோஸ்பேஸ் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரம், கடந்த 33 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து தரும் தொழிலை செய்து வருகிறோம். அமெரிக்க நிறுவனமான போயிங் நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறோம். அவர்களுக்கு துணை நிறுவனமாக நாங்கள் செயல்பட்டு வந்தோம். தற்போது நேரடி ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
சேலம் மற்றும் ஓசூரில் இதற்கான உற்பத்தியை தொடங்க இருக்கிறோம். போயிங் விமான நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து வழங்கவுள்ளோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்பட்டு 2022ஆம் ஆண்டு முதல் அவர்களுக்கு தேவையான உதிரி பாகங்களை வழங்கவுள்ளோம்.