ஆளுநர் என்பவர் அரசியல் குறித்து அதிகம் பேசாமல் இருப்பது நல்லது: சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி சென்னை: பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன்(65) ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், "குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இணைந்து தமிழ்நாட்டிற்கு ஒரு புதிய வரலாற்றுச் சிறப்பை தந்துள்ளனர்.
அதாவது ஒரே மாநிலத்திலிருந்து 3 பேர் ஆளுநராக இருப்பது இதுவே முதல் முறையாகும். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து இருப்பது ஒரு புதிய வரலாறு, இது ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெருமையாக நாங்கள் கருதுகிறோம்.
இது தனிப்பட்ட மனிதனுக்குக் கிடைத்த வெற்றியோ, அங்கிகாரமோ இல்லை. கடுமையாக உழைத்ததற்குப் பிரதமர் நரேந்திர மோடி அங்கீகாரம் தரத் தயங்கமாட்டார் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்பதை இது நிரூபித்து உள்ளது. தமிழ்நாட்டின் பெருமை, கலாச்சாரம், இலக்கியம், தொன்மை மீது குடியரசுத் தலைவருக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்ள பிடிப்பை இது நிரூபித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொருத்தவரை அதிக அளவில் பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் மேன்மைக்கு உழைப்பது தான் தமிழ்நாட்டிற்குப் பெருமையாக இருக்கும்.
ஜார்க்காண்ட்க்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே ஒரு புதிய பாலத்தை உருவாக்குவோம். இரண்டு மாநில வளர்ச்சிக்கும் எந்த சூழலை உருவாக்கினால் இரு மாநிலங்களுக்கு வளர்ச்சிக்கு உதவுமோ அத்தகைய திட்டங்களையும், சூழல்களையும் உருவாக்குவேன். ஆளுநர் என்பவர் அரசியல் குறித்து அதிகம் பேசாமல் இருப்பது நல்லது என்பது என நான் கருதுகிறேன். அரசியலிலிருந்து பரிமாண வளர்ச்சியாக ஆளுநராக உயர்ந்த பதவி அடைந்துள்ளோம். அதனால் அரசியலில் நாட்டம் கொள்ளாமல் மாநில முன்னேற்றத்தில் மட்டும் கவனத்தைச் செலுத்த வேண்டும்" இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க: Chennai Open: இந்திய அணி வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!